Tamil Sanjikai

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மராட்டியம், கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடைசி மற்றும் 47வது நாளில் 3.50 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி உண்டியல் வசூலாகி உள்ளது என அறநிலையத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

0 Comments

Write A Comment