எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் தமிழக அரசு இலங்கையிடம் மன்றாடி அவர்களை விடுதலை செய்வதும் வாடிக்கையாக நிகழும் நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு முதல் மீன்பிடித்து வந்துள்ளனர். அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் சிலரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களை அவர்கள் பயன்படுத்திய நாட்டு படகுடன் கைது செய்துள்ளனர். 8 மீனவர்களையும், அவர்கள் பயன்படுத்திய நாட்டுப்படகுடன் காரைநகர் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
இலங்கை அரசின் புதிய மீன்பிடி சட்ட மசோதாவின் கீழ் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள், கடந்த சில நாட்களாக இலங்கை படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது நடவடிக்கையை தொடர்வது அச்சம் தருவதாகவே உள்ளது எனக் கூறியுள்ளனர்.
0 Comments