Tamil Sanjikai

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரை சேர்ந்த 15 பேர் நேற்று முன் தினம் இரவு ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 4.45 அளவில் வேன் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வந்துக் கொண்டிருந்த்து போது சாலையில் சாரல் மழை தூறிக்கொண்டிருந்த்து.

வேனுக்கு பின்னால் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ், வேனை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பஸ்சும், வேனும் லேசாக உரசிக்கொண்டன. இதனால் பஸ்சும், வேனும் உடனடியாக அங்கேயே நிறுத்தப்பட்டன. வேனில் இருந்த பக்தர்கள் கீழே இறங்கி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த சில பயணிகளும் கீழே இறங்கி பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற மற்றொரு பஸ் நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நின்றுகொண்டிருந்த பஸ் நகர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும், வேன் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் வேன் சில அடி தூரம் தூக்கிவீசப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பஸ்களும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கியது. பஸ்சின் அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் மற்றும் பஸ்சுக்குள் இருந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலின் பேரில் காவல்துறையினரும், தீயணைப்பு வீர்ர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அம்ஜத்குமார், முருகன், நாகர்கோவில் ஜீவாரூபி, பரமக்குடி பாஸ்கர் (34), மதுரை வாடிப்பட்டி பிரதீப் (26), பாளையங்கோட்டை தவசிமுத்து (47) என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 17 பேர் பாளை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

0 Comments

Write A Comment