முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பெண்களுக்கு உதவுவதற்காக 181 ஹெல்ப் லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார். பாலியல் சீண்டல், மன அழுத்தம், குடும்ப பிரச்சனை, போலீஸ் மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதற்காக பெண்களுக்காக பிரத்யேக உதவி மையமாக இது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த உதவி மையத்திற்கு போன் செய்தால் அவர்களது புகார் மற்றும் தேவையின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் மற்றும் மருத்துவ உதவி கிடைக்க வழிவகை காணப்படுகிறது. தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து பெண்கள் உதவி கேட்டாலும் உடனடியாக பாதுகாத்து தேவையான உதவிகள், ஆலோசனைகளை இந்த உதவி மையம் வழங்குகிறது.
181 ஹெல்ப்லைன் தொடங்கிய 24 மணி நேரத்தில் 5500 போன்கள் பெண்களிடம் இருந்து மையத்திற்கு வந்துள்ளன. இதில் 2 ஆயிரம் பெண்களிடம் அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தனர். பல்வேறு பிரச்சனைகளை கூறிய 300 பெண்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த மாவட்டத்தின் சமுக நல அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், போலீஸ், மருத்துவதுறை அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்பட்டன.
ஒரு பெண் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்ற போது உதவி மையத்திற்கு போன் செய்துள்ளார். அவருக்கு முழுமையான ‘கவுன்சிலிங்’ அளிக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் தற்கொலை முடிவில் இருந்து மனம் மாறினார். இதுபோல பாலியல் தொல்லை, வெளியிடங்களுக்கு செல்லும் போது ஏற்படும் பாதிப்பு குறித்து அதிக அழைப்புகள் வருகின்றன. பெண்கள் எந்த இடத்தில் இருந்து பேசினாலும் அந்த இடத்திற்கே சென்று பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காப்பகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், போலீஸ் உதவியுடன் விரைவாக தீர்வு கிடைக்க உதவு செய்கிறோம் என இதுகுறித்து சமூக நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
0 Comments