Tamil Sanjikai

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

நாளை 2019ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், இன்று இரவிலிருந்தே சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டிய பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் . 31-ம் இரவு 9 மணியிலிருந்து சென்னையின் முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் பாதுகாப்பு பணிக்காக 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள், என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பைக் ரேஸ் நடைபெறுவதை தடுப்பதற்காகவே, 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 100 முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலங்கரை கடற்கரை பகுதிகளில், மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், மணலில் செல்லக் கூடிய கண்காணிப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றும், காவல்துறை உதவி மையக் கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும், சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும், கடலில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க, குதிரைப்படைகள் மூலம் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பு மேற்கொள்ளப்படும், என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, குற்ற ஆவண காப்பகத்தில், குற்றம் செய்தவரின் தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment