Tamil Sanjikai

தமிழகத்தில் நவம்பர் 19-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் 13 பேரும், பன்றிக்காய்ச்சல் காரணமாக 27 பேரும் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு, பன்றிக்காய்ச்சல், வேகமாக பரவிவருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நவம்பர் 19-ம் தேதி வரை தமிழகத்தில் டெங்குவால் 13 பேர், பன்றிக்காய்ச்சலால் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டெங்கு காய்ச்சலால் 3440 பேரும், பன்றிகாய்ச்சலால் 1745 பேரும் பாதிக்கபட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோழிக்கோடு, காளகஸ்தி ஆகிய இடங்களில் காய்ச்சலை கட்டுபடுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, தமிழகத்தில் அதனை மேற்கொள்ளலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல்களை கட்டுப்படுத்த, தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தார்கள்.

0 Comments

Write A Comment