Tamil Sanjikai

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் ஓன்று நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரிதாநாயர், அவருடைய முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சரிதா நாயர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இன்று பிற்பகல் வழங்கிய தீர்ப்பில் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

மேலும் சரிதா நாயரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment