திருச்சி அருகே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை பகுதியிலுள்ள மலையப்பபுரத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பழனிச்சாமி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அவர் வீட்டில் வேலை பார்க்கும் மருதம்பாள் (70) என்ற மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டிலிருந்த குடிநீர் மின்மோட்டாரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் மருதம்பாள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, இன்று மதியம் லால்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு இருசக்கர வாகனத்தின் முன்புறம் குடிநீர் மின் மோட்டார் உடன் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், நேற்று இரவு நீதிபதி வீட்டில் குடிநீர் மின் மோட்டார் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து லால்குடியை சேர்ந்த இளையராஜா (38), வீரபாண்டி (23), பார்த்திபன் (26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments