Tamil Sanjikai

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கூகுள் மேப் உதவியுடன் பணக்காரர்களின் வீடுகளை தேடிக் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் இருவரை சென்னை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே போல் தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளிலும் வசதியானவர்களின் வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. இந்த நிலையில் வேறொரு கொள்ளை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த சத்யரெட்டி என்பவனை கடந்த 1-ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வடக்கு மண்டல போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்டனர். அவனிடம் நடத்திய விசாரணையில் சென்னை கொள்ளைக்கும் அவனுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

முதலில் கூகுள் மேப் மூலம் சென்னையில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தேடிய பின்னர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் கொள்ளையன் ஆட்டோவில் சென்று வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்ய ரெட்டி மற்றும் அவனது கூட்டாளி நாராயண குரு ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படையினர் ஐதராபாத் சென்று காவலில் எடுத்து அழைத்து வந்துள்ளனர். அவர்கள் சத்யரெட்டியிடம் இருந்து 120 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தமிழகத்தில் நடந்த மற்ற கொள்ளை வழக்குகளிலும் இவர்களின் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது . இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் கொள்ளையர்களை ஆஜர்படுத்தியுள்ளனர்.

0 Comments

Write A Comment