Tamil Sanjikai

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்து தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது.

கஜா புயல் கரையைக் கடக்கும் போது பலத்த சூறைக் காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்ததுடன், மின்சார கம்பங்களும் சேதமடைந்தன. இதனால், பல இடங்களில் மின்சாரத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அளவில் மின்சாரத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், ‘இதுவரை கஜா புயல் காரணமாக 12,000 மின் கம்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது முதற்கட்ட விபரம் தான். இன்னும் முழு பாதிப்பு குறித்து தகவல் இல்லை.

அதே நேரத்தில் மின் கம்பங்கள் சேதமடைந்த இடங்களிலும், மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்ட இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருவாரூர், தஞ்சை மற்றும் நாகையில் இருக்கும் மின் கம்பங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment