Tamil Sanjikai

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). தொழில் அதிபரான இவர், கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர், சபரிமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

ரமேசின் மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகை, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தென் சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 வடமாநில வாலிபர்கள் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிவதும், பின்னர் ரமேஷ் வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதிப்பதும், கொள்ளையடித்த நகைகளை பையில் போட்டு மீண்டும் வெளியே வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

அந்த காட்சிகளை வைத்து வடமாநில கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை உதவி கமிஷனர் சங்கர நாராயணன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் சென்னை புறநகரில் பணியாற்றும் வடமாநில கட்டிடத்தொழிலாளிகள், ஓட்டல்களில் பணியாற்றும் தொழிலாளிகளை பிடித்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment