தற்போது டெல்லியில் நடந்து வரும் 10–வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி போட்டியில் அரியானாவைச் சேர்ந்த 21 வயது இந்திய வீராங்கனை சோனியா சாஹல், வடகொரியாவின் ஜோ சன் வாவை எதிர்கொண்டார். மூன்று ரவுண்ட் கொண்ட இந்த ஆட்டத்தில் இருவரும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர். முதல் இரண்டு ரவுண்டில் இருவரும் சரிசம ஆதிக்கம் செலுத்தியது போன்றே தெரிந்தது. 3–வது ரவுண்டில் தொடக்கத்தில் தற்காப்பு பாணியை கையாண்ட சோனியா கடைசி கட்டத்தில் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு, நடுவர்களின் கவனத்தை ஈர்த்தார்.
போட்டியின் முடிவில் 5–0 என்ற கணக்கில் (30–27, 30–27, 30–27, 29–28, 30–27) சோனியா சாஹல் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சோனியா சாஹல் கூறுகையில், ‘இறுதிசுற்றுக்கு வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அதுவும் குறைந்த வயதிலேயே இந்த நிலையை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரைஇறுதியை பொறுத்தவரை கடைசி ரவுண்டில் ஆதிக்கத்தை நிலைநாட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். அதனால் எனது ஆட்ட பாணியை உடனடியாக மாற்றிக்கொண்டு, வேகத்தை மேலும் தீவிரப்படுத்தி, வெற்றியை வசப்படுத்தினேன். எனது இறுதிப்போட்டிக்குரிய எதிராளி, கடுமையான குத்துகளை விடக்கூடியவர். அதற்கு ஏற்ப நான் தயாராக வேண்டியது அவசியம். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் தங்கப்பதக்கம் வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.
மற்றொரு அரைஇறுதி போட்டியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் சீனாவின் டான் டோவுடன் நடந்த பயோடியில் தோல்வியுற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றார். உலக போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
இன்று (சனிக்கிழமை) மாலை இறுதிப்போட்டிகள் நடைபெறுகின்றன. 6–வது தங்கப்பதக்கத்துக்கு குறி வைத்துள்ள இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொள்கிறார். சோனியா சாஹல் தனது இறுதி சுற்றில் ஜெர்மனியின் வானெர் கேப்ரியலியுடன் மோதுகிறார். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
0 Comments