Tamil Sanjikai

உலகக் கோப்பை ஆடவருக்கான ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும் கட்டாக்கில் உள்ள பிராபாட்டி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்வில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அத்துடன், கலை நிகழ்ச்சிளும் களைகட்டவுள்ளது. இதற்கான, ஒத்திகையில், கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில், 1982-ஆம் ஆண்டுக்குப் பின்பு இரண்டாவது முறையாக உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள், தலா 4 அணிகள் வீதம் 4 பிரிவுகளில் களம் காண்கின்றன. இந்திய அணி அங்கம் வகிக்கும் 'சி' பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி, கடைசியாக 1975-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றது. அதையடுத்து, இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை. எனவே, இந்த குறையை, சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் நிவர்த்தி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனிடையே, போட்டியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து அணி கேப்டன்களையும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேற்று சந்தித்தார். பின்னர், புவனேஸ்வரில் உள்ள முக்தேஷ்வரர் ஆலயத்தின் முன்பு, சாம்பியன் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. உலகக் கோப்பை ஹாக்கி தொடக்க நிகழ்ச்சியை ஒட்டி, புவனேஸ்வர் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள், அரசு அலுவலகங்கள் பிற்பகல் 1.30 வரை மட்டுமே செயல்படும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் போட்டியில், இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment