Tamil Sanjikai

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. டிசம்பர் 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 16 நாட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, ‘சி’ பிரிவில் பெல்ஜியம், இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா, ‘டி’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். கடைசி இடம் பெறும் அணிகள் வெளியேறும். ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் ‘கிராஸ் ஓவர்’ முறையில் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடத்தை பெறும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும்.

முதல் நாளான நேற்று உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 15-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அதற்கு தகுந்த பலனும் கிடைத்தது. 10-வது நிமிடத்தில் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் மன்தீப்சிங் முதல் கோல் அடித்தார். 12-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங், பந்தை வலைக்குள் அனுப்பினார். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. தென்ஆப்பிரிக்க வீரர்கள் தடுப்பு ஆட்டத்திலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்திய வீரர்கள் சிம்ரன்ஜீத் சிங் 43-வது நிமிடத்திலும், லலித் உபாத்யாய் 45-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டனர். 46-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சிம்ரன்ஜீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடியும் தென்ஆப்பிரிக்க அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது.

இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வென்று, எதிர்பார்த்தபடியே இந்த உலக கோப்பை தொடரை அட்டகாசமாக தொடங்கி உள்ளது. 200-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணியின் துணைகேப்டன் சிங்லென்சனா சிங் கோல் எதுவும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற 2-ந் தேதி பெல்ஜியத்துடன் மோதுகிறது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, 11-வது இடத்தில் உள்ள கனடாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை சாய்த்தது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணி, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியையும் (மாலை 5 மணி), தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியையும் (இரவு 7 மணி) சந்திக்கின்றன.

0 Comments

Write A Comment