உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை, பாகிஸ்தான் வென்றது.
நாட்டிங்காமின், ட்ரென்ட் பிரிட்ஸில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. இங்கிலாந்து பெளலர்கள் அனைவரின் பந்துவீச்சையும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பாரபட்சமின்றி அடித்து நொறுக்கினர். இதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்களை குவித்தது.
349 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டத்தின் தொடக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரூட், பட்லர் இருவரும் அடுத்தடுத்து சதமடைத்து அசத்தியதால் இங்கிலாந்து அணி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என உள்ளூர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், சதமடித்த கையோடு இருவரும் பெவிலியன் திரும்பியதையடுத்து, ஆட்டம் மீண்டும் பாகிஸ்தான் வசம் வந்தது. இறுதி கட்டத்தில் அணியில் வெற்றிக்காக போராடிய மொயின் அலியும் 48 -ஆவது ஓவரின் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 25 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலையில், அணியின் கடைநிலை வீரர்களால் அவ்வளவு ரன்களை அடிக்க முடியவில்லை. 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
0 Comments