Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த காலங்களில் பாகிஸ்தானிடம் தோற்காத, இந்தியா, இந்த போட்டியிலும், அந்த சாதனையை தொடர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. இன்று, மான்செஸ்டர் நகரில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கும் சூழலில், இருநாடுகளின் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

பொதுவாகவே, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி என்றாலே, கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகம் களைகட்டுவதோடு, உச்சகட்ட பரபரப்பு நிலவும். தற்போது, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் சூழலில், இப்போட்டி நடைபெறுவது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

உலக கோப்பை போட்டிகளை பொருத்தவரை, கடந்த காலங்களில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி, இந்தியாவை ஒருமுறை கூட வென்றது கிடையாது. 1992 ம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையையும் வென்றதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி தொடர்ந்து வலிமையுடன் திகழ்ந்து வருகிறது. விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும், பும்ரா நம்பர் ஒன் பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் கணிக்க முடியாத அணியாகவே உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை போட்டி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமிருக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய வேண்டும் கூறியுள்ளார்..

இது போர் அல்ல என்றும், இருதரப்பு ரசிகர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், மழையின் குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மான்செஸ்டரின் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரியாகவும் இருக்க கூடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. மான்செஸ்டர் நகரில், இன்று , மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது.

0 Comments

Write A Comment