Tamil Sanjikai

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 10-வது பெண்கள் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைபிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் வந்த இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியனுமான மேரிகோம், அய்ஜெரிம் கேசனாயேவாவுடன்(கஜகஸ்தான்) காளத்தில் இறங்கினார். இது தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று ரவுண்ட் கொண்ட ஆட்டமாகும். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது ரவுண்டில் கொஞ்சம் தடுமாறினார். சில குத்துகளை வாங்கிய மேரிகோம், ஒரு முறை களத்தை சுற்றி இருக்கும் கயிற்றிலும் எதிராளியால் தள்ளப்பட்டார். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட மேரிகோம் கடைசி ரவுண்டில் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்ததோடு, ஆக்ரோஷமாக சில குத்துகளை விட்டு புள்ளிகளை சேர்த்தார். 5 நடுவர்களும் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். மேரிகோம் கால்இறுதியில் சீனாவின் யு வூவை நாளை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ‘இளம் புயல்’ இந்தியாவின் மனிஷா மோன் 54 கிலோ பிரிவில் உலக சாம்பியன் டினா ஜோலாமானுடன் (கஜகஸ்தான்) மோதினார் . உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த மனிஷா 5-0 என்ற புள்ளி கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 29-28) உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். ‘மிகவும் நம்பிக்கையுடன் ஜோலாமானை எதிர்கொண்டேன். களத்திற்குள் வந்ததும் எதிராளி உலக சாம்பியனா அல்லது வெண்கலம் வென்றவரா என்பது எனக்கு ஒரு பிரச்சினையே கிடையாது’ என்று மனிஷா தெரிவித்துள்ளார்.

இதே போல் லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) 69 கிலோ பிரிவில் ஏதெய்னா பைலோனையும் (பனாமா), பாக்யபதி கச்சாரி (இந்தியா) 81 கிலோ பிரிவில் ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவையும் தோற்கடித்து கால் இறுதியை உறுதி செய்துள்ளனர். அதே சமயம் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சரிதா தேவி ஏமாற்றம் அளித்தார். அவர் 60 கிலோ பிரிவில் 2-3 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்தின் கெலி ஹாரிங்கிடம் தோற்று வெளியேறினார். போட்டிக்கு பிறகு 36 வயதான சரிதா தேவி , ‘நடுவர்களின் தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மூன்று ரவுண்டிலும் எனது கை தான் ஓங்கி இருந்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஆசிய போட்டியின் போது சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தேன். அதனால் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment