Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 42-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ்அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் கிறிஸ் கெய்ல் 7 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து களமிறங்கிய இவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அரைசதம் அடித்த இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹெட்மயர், ஷாய் ஹோப் உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் சற்று அதிரடி காட்டிய ஹெட்மயர் 39 ரன்களிலும், தொடர்ந்து ஆடி அரைசதம் அடித்த ஷாய் ஹோப் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரன் மற்றும் ஜாசன் ஹோல்டர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இதில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் 58 ரன்களிலும், ஜாசன் ஹோல்டர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. கடைசியில் பிராத்வெய்ட் 14 ரன்னுடனும், பாபியன் ஆலென் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் தவ்லத் ஜட்ரன் 2 விக்கெட்டுகளும், ரஷித்கான், முகமது நபி, சையத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குல்படின் நைப் மற்றும் ரமத் ஷா களமிறங்கினர். இதில் குல்படின் நைப் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த இக்ரம் அலி மற்றும் ரமத் ஷா நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்து அசத்தினர். இதில் ரமத் ஷா 62 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த நஜிபுல்லா ஜட்ரன், இக்ரம் அலி உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய இக்ரம் அலி 86 ரன்களிலும், நஜிபுல்லா ஜட்ரன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதற்கு பின் முகமது நபி 2 ரன்னிலும், சமியுல்லா ஷின்வாரி 6 ரன்னிலும், அஸ்ஹார் ஆப்கன் 40 ரன்களிலும், தவ்லத் ஜட்ரன் 1 ரன்னிலும், ரஷித்கான் 9 ரன்னிலும், சையத் ஷிர்ஜத் 25 ரன்னிலும் என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆட இறுதியில் முஜீப் ரகுமான் மட்டும் 7 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வெய்ட் 4 விக்கெட்டுகளும், கெமார் ரோச் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் கெய்ல் மற்றும் ஒஷானே தாமஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment