Tamil Sanjikai

காஷ்மீரில், இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக, உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி லீக்கில் பாகிஸ்தானுடன் (ஜூன் 16-ந்தேதி) மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே உலக கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்திய அணியிடம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். இதற்கு மத்தியில் உலக கோப்பை ஆட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:- உலக கோப்பை நெருங்கும் போது இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்கும். இந்த விவகாரத்தில் ஐசிசி செய்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தியா விளையாட வேண்டாம் என்று அரசு நினைத்தால், நாம் விளையாட போவது இல்லை.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடவில்லை என்றால், பாகிஸ்தானுக்கு புள்ளிகள் கிடைக்கும். ஒருவேளை இறுதிப்போட்டியாக இருந்தால், விளையாடாமலேயே பாகிஸ்தான் கோப்பை வெல்லும். ஐசிசியிடம் இது குறித்து நாங்கள் எதுவும் முறையிடவில்லை.

0 Comments

Write A Comment