Tamil Sanjikai

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல முன்னாள் வீரரான பிரையன் லாரா (வயது 50). இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், லாரா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், இன்று காலை அதிகளவில் உடற்பயிற்சி மேற்கொண்டேன். இதனால் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவரை சந்திப்பது சிறந்தது என நினைத்தேன். எனவே தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து வலி இருந்தது. நிறைய பரிசோதனைகள் நடந்தன.

நான் தற்போது நலமுடன் இருக்கிறேன் என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். சிகிச்சை முடிந்து நாளை ஓட்டல் அறைக்கு திரும்புவேன். எனது ரசிகர்கள் அதிக கவலை அடைந்து உள்ளனர் என எனக்கு தெரியும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என அவர் கூறியுள்ளார்.

அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகிறது. 1990 முதல் 2007 வரை 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 11,953 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 52.89 ஆகும். இதில் 34 சதமும், 48 அரை சதமும் அடங்கும். 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி 10,405 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 40.17 ஆகும். 19 சதமும், 63 அரை சதமும் அடித்துள்ளார். டெஸ்ட் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் எடுத்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் லாரா மட்டுமே.

0 Comments

Write A Comment