Tamil Sanjikai

நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில், நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு பென்ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோபால் சர்ச்சையில் சிக்கியது. நடுவரான உல்ஹாஸ் காந்த்தே நோ பால் கொடுத்து விட்டு, பின்னர் தனது முடிவை மாற்றி நோபால் இல்லை என்று அறிவித்தார். பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்தபோது, இந்த சர்ச்சை எழுந்ததால், களத்தில் நின்ற சான்டநெற் மற்றும் ஜடேஜா, இருவரும் உடனடியாக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கெல்லாம் ஒருபடிமேலாக, வழக்கமாக எப்போதும் இக்கட்டான தருணங்களில் அமைதி காக்கும் தோனி , களத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியது.

தோனி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. தோனியின் செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோனியின் நடவடிக்கை தவறான முன்உதாரணம் எனவும் அவர்கள் சாடி இருந்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கங்குலி இது பற்றி கூறும்போது, “ அனைவரும் மனிதர்கள்தான், அவருடைய போட்டித்தன்மை வியக்க வைக்கிறது” என்றார்.

0 Comments

Write A Comment