Tamil Sanjikai

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் (Cathryn Fitzpatrick) ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்த கௌரவத்தைப் பெறும் ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் (2009), கபில் தேவ் (2009), பிஷன் சிங் பேடி (2009) மற்றும் அணில் கும்ப்ளே (2015), ட்ராவிட் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

விளையாட்டுத் துறையில் டெண்டுல்கரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1999 இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதையும், 2008 இல் இரண்டாவதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருதும் சச்சினுக்கு வழங்கப்பட்டது. மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனையையும் சச்சின் படைத்தார்.

0 Comments

Write A Comment