Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை விலக்கிவிட்டு, ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டுமென பரவலாக கருத்து எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பெளலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள், இயன்முறை மருத்துவர் (பிசியோதெரஃபிஸ்ட்), மனவள பயிற்சியாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் என ஒட்டுமொத்த அணி நிர்வாகத்தையே மாற்றி அமைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவெடுத்தது.

இப்பொறுப்புகளில் தற்போது உள்ளவர்களை விலக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ள பிசிசிஐ, விண்ணப்பங்களை இம்மாதம் 30 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இன்று அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பௌலிங் பயிற்சியாளர் பாரத் அருண் உள்ளிட்டோரின் பணி காலம் 45 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment