Tamil Sanjikai

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதிசுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இதனால் சிந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். யமாகுச்சிக்கு எதிராக ஆடிய 14 ஆட்டங்களில் இதுவரை 10 போட்டிகளில் சிந்து வெற்றி கண்டிருப்பதால் இந்த முறையும் சிந்து ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 12-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற சிந்து, அந்த முன்னிலையை தக்க வைக்க தவறினார். அதன் பிறகு யமாகுச்சி 14-14 என்று சமனுக்கு கொண்டு வந்தார். இந்த சமயத்தில் சிந்து இரண்டு முறை பந்தை வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளியை தாரைவார்க்க யமாகுச்சி மீண்டெழுந்தார். தொடர்ச்சியாக 6 புள்ளிகளை குவித்த யமாகுச்சி முதல் செட்டை வென்றார்..

2-வது செட்டிலும் இருவரும் ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டினர். 4-4 என்று சமநிலைக்கு பிறகு யமாகுச்சியின் கை ஓங்கியது. யமாகுச்சி, இடைவிடாது அதிகமான ஷாட்டுகளை அடித்து அதன் மூலம் சிந்துவை தடுமாற வைத்தார். ஒரு புள்ளியை எடுக்க இருவரும் தொடர்ச்சியாக 51 ஷாட்டுகளை விளாசிய போது ரசிகர்கள் பரவசத்திற்கு உள்ளானார்கள். இந்த செட்டையும் தனதாக்கிய யமாகுச்சி 21-15, 21-16 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்து கோப்பையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த ஆட்டம் 51 நிமிடங்கள் நடந்தது. வாகை சூடிய யமாகுச்சி ரூ.60 லட்சத்தை பரிசுத்தொகையாக பெற்றார்.

இரண்டாவது இடத்தை பிடித்த சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கத்துடன் ரூ.29 லட்சம் கிடைத்தது. 37 ஆண்டுகால இந்தோனேஷிய பேட்மிண்டன் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் சாய்னா நேவால் மட்டுமே இதுவரை மகுடம் சூடியிருக்கிறார். அந்த வரிசையில் இணைவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பை சிந்து கோட்டை விட்டு விட்டார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான 24 வயதான சிந்து இந்த ஆண்டில் எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment