இந்திய கைப்பந்து சம்மேளனம் மற்றும் பேஸ்லைன் இந்தியா நிறுவனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடக்கிறது.
இந்த போட்டியில் ஆமதாபாத் டிபன்டர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், யு மும்பா வாலி, ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. போட்டியில் பங்கேற்கும் அணிகள் உள்ளிட்ட விவரங்களை இந்திய கைப்பந்து சம்மேளனம் மும்பையில் நேற்று அறிவித்தது. போட்டி மற்றும் அணிகளின் லோகேவும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் வாசுதேவன், பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர், புரோ கைப்பந்து லீக் தலைமை செயல் அதிகாரி ஜோய் பட்டாச்சார்யா மற்றும் அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்கும் 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 12 லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்திலும், அரைஇறுதி, இறுதிப்போட்டி உள்பட 6 ஆட்டங்கள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் அடுத்த மாதம் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 12 பேர் இடம் பெறுவார்கள். இந்த போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு 50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு 20 லட்சமும், அரை இறுதியில் தோல்வி காணும் அணிகளுக்கு தலா 10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments