Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ,ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரமத் ஷா மற்றும் குல்படின் நைப் களமிறங்கினர். இதில் குல்படின் நைப் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆக, அடுத்த பந்திலேயே ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி டக் அவுட்டாகி நடையை கட்டினார்.

தொடக்க வீரராக களமிறங்கிய ரமத் ஷா 35 ரன்களில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த இக்ரம் அலி மற்றும் அஸ்ஹார் ஆப்கன் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த அஸ்ஹார் ஆப்கன் 42 ரன்களில் போல்ட் ஆக, அவரை தொடர்ந்து இக்ரம் அலி 24 ரன்னில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த முகமது நபி 16 ரன்னிலும், ஓரளவு ரன் சேர்த்த நஜிபுல்லா ஜட்ரன் 42 ரன்களிலும், ரஷித்கான் 8 ரன்னிலும், ஹமித் ஹசன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்தது. கடைசியில் சமியுல்லா ஷின்வாரி 19 ரன்னுடனும், முஜீப் ரகுமான் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணியில் ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், இமாத் வாசிம் மற்றும் வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஷதப் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரகளாக பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் களமிறங்கினர். இதில் பஹார் ஜமான் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த இமாம் உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இமாம் உல்-ஹக் 36 ரன்களில் அவுட்டாக, அவரை தொடர்ந்து பாபர் அசாம் 45 ரன்களில் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த முகமது ஹபீஸ் 19 ரன்னிலும், ஹாரிஸ் சோகைல் 27 ரன்னிலும், சர்ப்ராஸ் அகமது 18 ரன்னிலும், ஷதப் கான் 11 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (230 ரன்கள்) எட்டியது. கடைசியில் இமாத் வாசிம் 49 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் ரகுமான் மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டுகளும், ரஷித்கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment