Tamil Sanjikai

ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி.

ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 150 என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸ், வாட்சன் களமிறங்கினார்கள்.
டுபிளிசிஸ் தொடக்க முதலே அதிரடியாக ஆடினார். க்ருணல் பாண்ட்யா வீசிய 4-வது ஓவரில், பவுண்டரி, சிக்ஸ், பவுண்டரி என பறக்கவிட்ட டுபிளிசிஸ், அதே ஓவரின் கடைசி பந்தில், டி காக் ஸ்டெம்பிங் செய்து அவுட் ஆக்கினார்.

இதன்பிறகு களமிறங்கிய ரெய்னா வெறும் 8 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ராகுல் சாஹர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 1 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 10.3 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 73 என இருந்தது.

பிறகு அனைவரும் எதிர்பார்த்த தோனி வந்தார். இவர் திறமையாக ஆடி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைப்பார் என ரசிகர்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், 12.4 ஓவரில், ஒரு ரன் எடுத்த தோனி, அதோடு நிறுத்திகொள்ளாமல் இரண்டாவது ரன் எடுக்க ஆசைப்பட்டு, ரன் அவுட் ஆகி, அதிர்ச்சி அளித்தார். மூன்றாவது அம்பயரின் நீண்ட நேர முடிவுக்கு பிறகு தோனி அவுட் என அறிவிக்கப்பட்டது. அப்போது, தோனி உள்ளிட்ட மொத்த மைதானமே சோக மையமாக காட்சியளித்தது.

இதன் பிறகு, வந்த பிராவோ, வாட்சனும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் ஆடினர். மலிங்கா வீசிய 16 ஓவரின் முதல் பந்தில் பிராவோ சிக்ஸ் அடிக்க, அதே ஓவரில் வாட்சன் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். அத்துடன், வாட்சன் அரைசதம் அடித்தார். பின்னர் 18 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. க்ருணல் பாண்ட்யா வீசிய 18 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு, மிரட்டினார் வாட்சன்.

12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி. 19-வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் பிரவோ அவுட் ஆகவே, மேட்ச் மீண்டும் விறுவிறுப்பானது. அந்த ஓவரின் கடைசி பாலில் ஜடேஜாவின் கேட்சை டி காக் விட்டு, பந்து பவுண்டரிக்கு சென்றது.

கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. மலிங்கா வீசினார். முதல் பந்தில் வாட்சன் சிங்கிள் அடித்தார். 2-வது பாலில் ஒரு சிங்கிள், 3-வது டபுள் அடித்தார் வாட்சன். 4-வது பந்தை சந்தித்த வாட்சன் இரண்டு ரன் எடுக்க முயற்சித்து ரன் அவுட் ஆனார். 5-வது பந்தில் 2 ரன்கள், கடைசி பாலில் 2 ரன் தேவை. எதிர்கொண்ட ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யூ ஆனார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை ஐபிஎல் கோப்பையை வென்றது.

0 Comments

Write A Comment