Tamil Sanjikai

உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட மணிப்பூரைச் சேர்ந்த 35 வயது இந்திய வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

10-வது மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் மேரி கோம், வட கொரியாவின் கிம் ஹ்யாங் மியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

கடைசியாக 2010-ம் ஆண்டில் நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் மேரி கோம்.

குத்துச் சண்டைப் போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி பெற்றுள்ள மேரி கோம், தற்போது, குத்துச் சண்டையில் 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களுடன் வரலாறு படைத்த ஐரிஷ் வீராங்கனை கேத்தி டெய்லரின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 6 முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, பத்மபூஷண் விருது பெற்ற முதல் அமெச்சூர் வீராங்கனை என பல சாதனைகளை முதன்முதலாகப் படைத்தவர் மேரிகோம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment