Tamil Sanjikai

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதி போட்டியில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கார்லோ பாலமை எதிர்கொண்டார். ஆட்டம் தலா 3 நிமிடம் வீதம் 3 ரவுண்ட் கொண்டது.

முதல் ரவுண்டில் கார்லோ பாலம் ஆக்ரோஷமாக தாக்குதல் தொடுக்க, அமித் பன்ஹால் தடுப்பாட்ட யுக்தியை சாதுர்யமாக கையாண்டார். அதே நேரத்தில் எதிராளியின் முகத்தில் வலுவாக ஒரு குத்தும் விட்டார். அடுத்த ரவுண்டில் அமித் பன்ஹால் ஆவேசமாக விளையாடினார். அவரது ஒரு குத்தில், கார்லோ பாலம் களத்தின் வளையத்தில் போய் விழுந்தார். இருவரும் மாறி மாறி குத்துகளை விட்டாலும் அமித் பன்ஹாலின் கையே ஓங்கியது. முடிவில் அமித் பன்ஹால் நடுவர்களின் ஒருமித்த தீர்ப்பின்படி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. அவர் நாளை நடக்கும் அரைஇறுதியில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த சகென் பிபோஸ்சினோவை சந்திக்கிறார்.

உலக போட்டியில் முதல்முறையாக பதக்கத்தை வெல்லும் அரியானாவைச் சேர்ந்த 23 வயதான அமித் பன்ஹால் கூறுகையில், ‘எனது தொடக்கம் மெதுவாக இருந்தது. ஆனால் 2-வது மற்றும் 3-வது சுற்றில் ஆதிக்கம் செலுத்தியதாக நினைக்கிறேன். எனது பயிற்சியாளர்கள் ஆக்ரோஷமாக ஆடும்படி கூறினர். அதன்படி செயல்பட முயற்சித்தேன். சகென் பிபோஸ்சினோவ் இடக்கை மூலம் தாக்குதல் தொடுக்கக்கூடியவர். அதற்கு ஏற்ப நான் வியூகம் வகுக்க வேண்டும்’ என்றார்.

மற்றொரு கால்இறுதியில் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், பிரேசிலின் வான்டெர்சன் ஆலிவிராவுடன் மோதினார். இதில் அபாரமாக செயல்பட்ட மனிஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் ஆலிவிராவை மிக எளிதாக வென்று அரைஇறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தார். உலக குத்துச்சண்டை தொடர் ஒன்றில் இந்திய வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கனவே விஜேந்தர்சிங் (2009-ம் ஆண்டு), விகாஸ் கிருஷ்ணன் (2011), ஷிவ தபா (2015), கவுரவ் பிதுரி (2017) ஆகிய இந்தியர்கள் உலக குத்துச்சண்டையில் பதக்கம் வென்று இருக்கிறார்கள். இந்த 4 பதக்கங்களும் வெண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இரு கால்இறுதி ஆட்டங்களில் ஏமாற்றமே மிஞ்சியது. 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத், ஈகுவடார் நாட்டின் ஜூலியோ சீசர் கேஸ்டிலோ டோரெசுடன் கோதாவில் இறங்கினார். சஞ்ஜீத், எதிராளியிடம் இருந்து சில குத்துகளை வாங்கியது பின்னடைவாகிப்போனது. இறுதியில் சஞ்ஜீத் 1-4 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார்.

இதே போல் இந்தியாவின் கவிந்தர் சிங் பிஷ்ட் 57 கிலோ எடைப்பிரிவில் 0-5 என்ற கணக்கில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பீட்டர் மெக்ரைலிடம் போராடி தோல்வியை தழுவினார்.

0 Comments

Write A Comment