Tamil Sanjikai

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை தகர்த்து, கால்பந்து விளையாட்டில் அதிக முறை கோல்டன் ஷூ விருதிற்கான சொந்தக்காரராக மாறி புதிய சாதனையை படைத்துள்ளார் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி. அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகின் நிகழ்கால சாம்பியன் வீரராக வலம்வருகிறார். அந்த நாட்டின் தேசிய அணிக்காகவும், பார்ஸிலோனா கிளப் அணிக்காகவும் சிறப்பாக விளையாடி பல கோல்களை அடித்துள்ளார்.

ஐரோப்பிய கண்டத்தின் எந்த ஒரு சிறந்த கால்பந்து அணியுமே மெஸ்ஸியை சமாளிக்கவே தனியாக கேம் பிளானுடன் களமிறங்கும் அளவிற்கு அவரது ஆட்டத்திறன் அபாரமானது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கோல்டன் ஷூ விருது மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்டிருப்பது அவரை சாதனை வீரராக மாற்றியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய லீக் போட்டிகளில் அதிக கோல்களை அடிக்கும் வீரருக்கு தங்கக் காலணி விருது வழங்கப்பட்டு வருகிறது. போர்சுகல் வீரர் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் தலா 4 முறை இந்த பெருமைமிகு விருதினை பெற்று சமநிலை வகித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டில் ஸ்பேனிஷ் தொடரான லா லீகா தொடரில் ஒட்டுமொத்தமாக 34 கோல்களை அடித்து அதிக கோல்கள் எடுத்த வீரர் என்ற காரணத்தினால் மெஸ்ஸிக்கு இந்த ஆண்டிற்கான கோல்டன் ஷூ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இவர் 5வது முறையாக பெறுகிறார். இதன் மூலம் உலகிலேயே இந்த விருதினை அதிக முறை வாங்கிய வீரர் என்ற பெருமையும் மெஸ்ஸியை சேர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக 2009-10 (34 கோல்கள்), 2011-12 (50 கோல்கள்), 2012-13 (46 கோல்கள்), 2016-17 (37 கோல்கள்) ஆகிய சீசன்களிலும் இவர் தங்கக் காலணி விருதினை பெற்றிருந்தார்.

31 வயதான மெஸ்ஸி இது தொடர்பாக கூறுகையில், “கால்பந்தாட்டத்தை நான் நேசிக்கிறேன், இருப்பினும் இந்த விருது நான் எதிர்பாராத ஒன்று, என்னுடைய கணவு எப்போதுமே ஒரு தொழில்முறை வீரராக இருப்பதே, என்னுடைய உழைப்பு, முயற்சிக்கு கிடைத்த பலனாக இதனை கருதுகிறேன். அனைத்திற்கும் மேலாக என்னுடைய சக வீரர்கள் உள்ளனர்” என்றார். பார்சிலோனா அணிக்காக இதுவரை 655 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள மெஸ்ஸி அதில் 572 கோல்கள் அடித்துள்ளார். அந்த அணிக்காக விளையாடியவர்களில் அதிக கோல்களை மெஸ்ஸியே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment