Tamil Sanjikai

உலகக்கோப்பையை வெல்ல போகும் அணி என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி, இந்திய அணி... இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாகவே ரவுண்ட் - ராபின் சுற்று போட்டிகளில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வந்தது. நியூசிலாந்துடனான செமி ஃபைனல் மேட்ச்சில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்ததையடுத்து எல்லாம் தலைகீழாக மாறி போனது.

மிடில் - ஆர்டர் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த தவறியது, நான்காவது வீரராக யாரை களமிறக்குவது என்பதில் முறையாக திட்டமிட்டு தீர்க்கமாக முடிவெடுக்காதது என, செமி ஃபைனலில் இந்தியா தோல்வியடைந்ததற்கான காரணங்களாக குறிப்பிட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர் கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விமர்சனங்கள், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அவரது கேட்பன் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்டுள்ள தோல்வி தொடர்பாக, கேப்டன் கோலிக்கும், உதவி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகி கூறும்போது, "கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் வருத்தமளிக்கின்றன. அதேசமயம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் விராட் கோலியை கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாகவும் நியமிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசித்து, பிசிசிஐ விரைவில் முடிவெடுக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை 10 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றுள்ளது என்பதும், 15 டி-20 போட்டிகளில் 12 -இல் வெற்றி வாகை சூடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment