Tamil Sanjikai

இன்று என் வாழ்க்கையின் கருப்பு தினம்’என்று மிதாலி ராஜ் உருக்கமாக ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு சர்ச்சையான செய்திகள் வெளியாகின. இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் தனித்தனியாக விளக்கம் கேட்டனர். அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐக்கு மிதாலி ராஜ் இமெயிலில், அதிகாரத்தில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டனர்.” என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார். பிசிசிஐ-க்கு அனுப்பப்பட்ட இந்த இமெயில் ஊடகங்களுக்கும் கிடைத்தது எப்படி என்று குழப்பம் ஏற்பட்டது.

நேற்று பயிற்சியாளர் ரமேஷ் பவாரிடம் பிசிசிஐ உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, 10 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை பவார் சமர்பித்தார். அதில், “மிதாலி ராஜ் சொந்த சாதனைகள் செய்வதற்காகவே விளையாடுகிறார். அணிக்காக விளையாடவில்லை. அணியின் வீராங்கனைகள் இடையே பிரிவை ஏற்படுத்துகிறார். அனைவரின் ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.” என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை பவார் கூறியிருந்தார்.

பவாரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மிதாலி ராஜ், தன்னுடைய வாழ்கையின் கருப்பு தினம் என்றும், 20 ஆண்டுகள் கடின உழைப்பை சந்தேகப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், “எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. என் நாட்டிற்காக 20 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் விளையாடினேன். என்னுடைய கடின உழைப்பு வீணாகிவிட்டது. இன்று, என் நாட்டுப்பற்று மற்றும் என் திறமை மீது சந்தேகம் எழுந்துள்ளது” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment