Tamil Sanjikai

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. நான்காவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்பது அறிய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

12ஆவது ஐபிஎல் தொடர் நிறைவு தருணத்தை எட்டி விட்டது. ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இறுதிப் போட்டியில், சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான முதல் தகுதிச் சுற்றில் மும்பை அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது. ஆனால் இரண்டாவது தகுதிச் சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தி எட்டாவது முறையாக அந்த அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. நடப்பு தொடரின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும் இரு அணிகளும் இறுதி போட்டியில் சந்திப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல்லில் இரு அணிகளையும் இந்தியா - பாகிஸ்தான் என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

இந்த இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. ஏற்கெனவே மூன்று முறை நேருக்கு நேர் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்தித்துள்ளன. இதில் இரு முறை மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்புத் தொடரில் சென்னை அணியுடனான 3 போட்டியிலும் மும்பையே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒரே தொடரில் சென்னை அணியை நான்கு முறை வீழ்த்தியதாக வரலாறு இல்லை. எனவே இன்றைய போட்டியில் சென்னையை மும்பை வீழ்த்தினால் அது வரலாறாக அமையும். அதே வேளையில் இன்றைய போட்டியில் கோப்பையை வெல்லும் அணி, ஐபிஎல்-இல் அதிக கோப்பைகளை வென்ற அணியாக மகுடம் சூடும். எனவே மகுடம் சூடப் போவது தோனி அணியா? ரோகித் சர்மா அணியா? என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் பெருக்கெடுத்துள்ளது.

0 Comments

Write A Comment