Tamil Sanjikai

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒரு வாரம் முன்பே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டத்தில் கலந்து கொள்ளும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் நேற்று பகல் விமானம் மூலம் சென்னை வந்தனர். மாலையில் 6 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியம் வந்தடைந்த பெங்களூரு அணி வீரர்கள் முதலில் கால்பந்து விளையாடினார்கள். பின்னர் மின்னொளியில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று பின்னடைவாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக விலகி இருக்கிறார். ‘நிகிடிக்கு பதிலாக மாற்று வீரரை அடையாளம் காணுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்’ என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் அணியின் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இதற்கிடையில் ஐ.பி.எல். போட்டியில் எந்தவொரு ஆட்டமும் பாகிஸ்தானில் உள்ள சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது என்று அந்த நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி பவாத் அகமது சவுத்ரி நேற்று அறிவித்தார். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புலவாமாவில் இந்திய ராணுவ படையினர் மீது நடத்திய தாக்குதலை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் அந்த போட்டியின் ஒளிபரப்பு தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த இந்திய நிறுவனமும் அதில் இருந்து உடனடியாக விலகியது. அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பவாத் அகமது சவுத்ரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டி பாகிஸ்தானில் ஒளிபரப்பு செய்யப்படாவிட்டால் அது ஐ.பி.எல். போட்டிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் ஒரு சூப்பர் பவராக இருக்கிறோம். நாங்கள் எப்பொழுதும் அரசியலையும், கிரிக்கெட்டையும் தனித்தனியாக பார்க்க தான் முயற்சி செய்தோம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி அரசியலை விளையாட்டில் கலக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ராணுவ தொப்பியை அணிந்து ஆடியது’ என்று தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது என்பது நினைவுகூரத்தக்கது.

0 Comments

Write A Comment