இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஸ்கோர் 141 ரன்னாக உயர்ந்த போது ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்னில் ஆட்டம் இழந்தார். மந்தனா 63 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் மிதாலி ராஜ் 20 ரன்னும், பூனம் ராவுத் 24 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
இந்திய அணி 42.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 51-வது ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய வீராங்கனை மந்தனா 2 ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் 4 சதம் 17 அரைசதம் உள்பட 2,025 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டியில் வேகமாக (51 இன்னிங்சில்) 2 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றார். அவரே ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது 20 ஓவர் போட்டி செயின்ட் லூசியாவில் நாளை நடக்கிறது.
0 Comments