Tamil Sanjikai

ஹெதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.3 ஓவர்களில், அணைத்து விக்கெட்டையும் இழந்து 161 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக நாதலி சிவெர் 85 ரன்னும் (109 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), லாரென் வின்பீல்டு 28 ரன்னும், டாமி பிமான்ட் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே தலா 4 விக்கெட்டும், பூனம் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், பூனம் ராத் 32 ரன்னும், தொடக்க வீராங்கனை மந்தனா 63 ரன்னும் (74 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.

41.1 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மிதாலி ராஜ் 47 ரன்னும் (69 பந்துகளில் 8 பவுண்டரியுடன்), தீப்தி ஷர்மா 29 பந்துகளில் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அன்யா ஷூப்சோல் 2 விக்கெட்டும், ஜார்ஜியா எல்விஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி ஆட்டநாயகி விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டி தொடரை வென்றது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அளித்த பேட்டியில், ‘சில இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அனுபவித்து விளையாடுவார்கள். இந்தியாவுக்கு வெளியில் சுழற்பந்து வீசுவது எளிதானதாக இருக்காது. உள்ளூரில் காலையில் பேட்டிங்கை தேர்வு செய்கையில் முதல் பாதி இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானதாகும். பின் பாதியில் தான் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறும். வீரர்களுக்கு பார்ம் வரும், போகும். ஆனால் பார்மில் இருக்கையில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கடைசி விக்கெட்டுக்கு இங்கிலாந்து ஜோடியை அதிக ரன் எடுக்க விட்டது லேசான ஏமாற்றம் அளித்தது. 162 ரன் இலக்கை எட்ட முடியும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹெதர் நைட் கருத்து தெரிவிக்கையில், ‘முதல் இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் தொடக்கத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். அப்படி விக்கெட் இழந்தால் போட்டியில் வெற்றி பெற முடியாது. 161 ரன்கள் எடுத்து விட்டு வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம். நாதலி சிவெர் எடுத்த ரன்னுக்கு நாங்கள் தோல்வியை சந்திக்கும் அணியாக இருந்து இருக்கக்கூடாது. லாரா மார்ஷ் முதல் போட்டியில் காயம் அடைந்ததால் அவரது சுழற்பந்து வீச்சை எங்களால் பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. தோல்விக்கு எங்களது பந்து வீச்சாளர்கள் காரணம் என்று நான் நினைக்கவில்லை. பேட்டிங்கில் நாங்கள் நல்ல தொடக்கம் காண்பதுடன் அதிக ஸ்கோரையும் எடுக்க வேண்டும்’ என்றார்.

0 Comments

Write A Comment