Tamil Sanjikai

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். கடந்த சனிக்கிழமையுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் முதல் அரைஇறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோத இருக்கிறது.

இந்திய அணி லீக் முடிவில் 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இந்திய அணி தோல்வி கண்டது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மற்ற எல்லா அணிகளையும் இந்திய அணி வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 5 சதம் உள்பட 647 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் எடுத்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த தெண்டுல்கரின் (673 ரன்கள்) சாதனையை முறியடிப்பார். கேப்டன் விராட்கோலி (442 ரன்கள்), தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (360 ரன்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இந்திய அணியின் மிடில் வரிசை மற்றும் பின்கள வரிசை வீரர்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் அதிக ரன் குவிக்க முடியும்.

பந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), முகமது ஷமி (14 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்), குல்தீப் யாதவ் (6 விக்கெட்) ஆகியோர் எதிர் அணியை தங்களது சிறப்பான பந்து வீச்சால் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுகிறார்கள். டோனி 223 ரன்கள் எடுத்து இருப்பதுடன் விக்கெட் கீப்பிங்கில் முத்திரை பதித்து வருகிறார். ஹர்திக் பாண்ட்யா 194 ரன்கள் மற்றும் 9 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டர் பணியை திறம்பட செய்து வருகிறார்.

நியூசிலாந்து அணி லீக்கில் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தது. தொடக்க லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் கம்பீரமாக காட்சி அளித்த நியூசிலாந்து அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

கேப்டன் கேன் வில்லியம்சன் (2 சதம் உள்பட 481 ரன்கள்) பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். இது தவிர ராஸ் டெய்லர் (261 ரன்கள்), மார்ட்டின் கப்தில் (166 ரன்கள்), டாம் லாதம் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். ஆல்-ரவுண்டரில் ஜேம்ஸ் நீஷம் (201 ரன்கள், 11 விக்கெட்), காலின் டி கிரான்ட்ஹோம் (158 ரன், 5 விக்கெட்) அசத்தி வருகிறார்கள். பந்து வீச்சில் பெர்குசன் (17 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (15 விக்கெட்), மேட் ஹென்றி (10 விக்கெட்) ஆகியோர் மிரட்டுகிறார்கள்.

இந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. அந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் இந்த உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்த தைரியத்துடன் நியூசிலாந்து அணி களம் காணும். இந்திய பேட்டிங் வரிசைக்கும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சுக்கும் இடையேயான சவாலாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சை இந்திய அணியினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு அமையும்.

இந்திய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையவும், நியூசிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கவும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மான்செஸ்டரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த 5 லீக் ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, டோனி, கேதர் ஜாதவ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், பெர்குசன், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட்.

0 Comments

Write A Comment