Tamil Sanjikai

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் எமர்ஜிங் நேஷன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதியில் நேருக்கு நேர் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான எமர்ஜிங் நேஷன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

எமர்ஜிங் நேஷன்ஸ் கோப்பையில், 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனால், இந்திய அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், தொடரின் இறுதிப் போட்டியும் கொழும்பு நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மொத்தம் 6 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. டிசம்பர் 4 முதல் 10-ஆம் தேதி வரை கராச்சியில் தங்கவுள்ள கிரிக்கெட் அணிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணையில் இந்திய அணி ‘ஏ’ பிரிவிலும், பாகிஸ்தான் அணி ‘பி’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளது. அதனால், லீக் போட்டிகளில் இரு அணிகளும் மோத வாய்ப்பில்லை. ஆனால், அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோத அதிக வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டே டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் 2 அரையிறுதிப் போட்டிகளும் கொழும்பு நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

0 Comments

Write A Comment