Tamil Sanjikai

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், இந்தியா அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து, 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்த நிலையில், எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா(1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல்(1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10 வது ஓவரில் வெளியேற . முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் ஆகியோரும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இழந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை தோனி, ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து மீட்டது.

இறுதியில் வெற்றிக்காக போராடிய ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும், டோனி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி, 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, இந்தியவை வெற்றி கொண்ட நியூசிலாந்து, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளை நடைபெறும், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுடன், நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் மோதும்.

0 Comments

Write A Comment