Tamil Sanjikai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்திருந்தன. அதையடுத்து 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புஜாரா (71) மற்றும் ரஹானே (70) ரன்கள் எடுத்திருந்தனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணியில் லையன் 6 விக்கெட்டுகளும், ஏ. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி போட்டியின் நான்காவது நாளான நேற்று களமிறங்கியது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிலைத்து நின்று ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 60 ரன்களில் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களான பீட்டர், டிராவிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் டிம் பைன் (41) மட்டும் சிறிது நேரம் நிலைத்து ஆடிய நிலையில் பும்முராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஜோஷ் ஹாசில்வுட் 13 ரன்களில் அஸ்வினின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் கேட்சாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி வரை நாதன் லியான் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பத்தாண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்டில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இது.

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக, பெர்த் நகரில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனில் கும்ளே தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. இந்திய அணியின் ரிஷப் பாண்ட் இந்த போட்டியில் மட்டும் 11 கேட்சுகளை பிடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இங்கிலாந்தின் ஜாக் ரஸல், தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோரின் முந்தைய உலக சாதனைகளை இதன் மூலம் ரிஷப் சமன் செய்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 15 வருடங்களுக்கு பிறகு முதல் வெற்றியை அடியலெய்டு மைதானத்தில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. கடைசியாக 2003ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்சில் 123 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 71 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட புஜாரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் வரும் 14- ஆம் தேதி தொடங்குகிறது.

0 Comments

Write A Comment