Tamil Sanjikai

தனது சொத்துக்களை விற்று மகளுக்காக சொந்தமாக கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி கொடுத்த தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார் அவரின் மகள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் சுரேந்திர பூனியா, தனது இளைமைக்காலத்தில் விளையாட்டுத்துறையின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டிருந்தார். அவரது கனவு நிறைவேறாமல் போகவே. தான் கண்ட கனவை தனது ஒரே மகளை வைத்தாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று ஆசைப்பட்டார் சுரேந்திர பூனியா.

வெறும் ஆசையுடன் மட்டுமே இருந்து விடாமல் தனது லட்சியத்தை நிறைவேற்ற மிகவும் தீவிரமாக இருந்த சுரேந்திர பூனியா, மகளின் விளையாட்டுத் திறனை சிறு வயதிலேயே மேம்படுத்த எண்ணி, கடந்த 2010ல் தன்னுடைய சொத்துக்களை விற்றதுடன், வங்கியில் பணம் கடனாக பெற்று 22 லட்ச ரூபாய் மதிப்பில் சில ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் ஒன்றினை ஜெய்பூரின் ச்சூரு பகுதியில் வாங்கினார்.

அங்கு விளையாட்டு அரங்கு ஒன்றை நிர்மாணிக்க தீர்மானித்த சுரேந்திர பூனியா, தனது மகளை பேட்மிண்டன் வீராங்கனையாக ஆக்க ஆசைப்பட்டார், ஆனால் அவரது மகளோ கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அங்கு கிரிக்கெட் வலைப்பயிற்சி தளத்துடன் கூடிய கிரிக்கெட் அரங்கை கட்டினார்.

தந்தை தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தற்போது அவரின் மகளான பிரியா பூனியா (வயது 22) நிறைவேற்றியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலக்கியதன் மூலம் வரும் 2019 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்காக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் தந்தை தனது மகனுக்காக ஷூட்டிங் தளம் ஒன்றை தனியாக கட்டி அதில் பயிற்சி மேற்கொள்ள வைத்தார். அதன் பலனாக அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்த நிலையில், தனக்காக கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி தனது திறனை வெளிப்படுத்த முனைந்த தனது தந்தையை பெருமைப்படுத்தியிருப்பதாகவே நினைப்பதாக பிரியா கூறினார்.

0 Comments

Write A Comment