Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மற்றும் சூப்பர் ஓவர் ஆட்டம் யாரும் எதிர்பாராத விதமாக டிராவில் முடிவடைந்ததையடுத்து, இப்போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம், உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆறாவது அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெறுகிறது.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்களை எடுத்தது.

242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. 90 ரன்களை கடப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லரும், ஸ்டோக்ஸும் நிலைத்து நின்று ஆடி, அணியை சரிவிருந்து மீட்டனர். இருவரும் சேர்ந்து 110 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 196 -ஆக இருந்தபோது, பட்லர் அவுட் ஆகி வெளியேற, நியூசிலாந்தின் கை மீண்டும் ஓங்கியது.

இருப்பினும், 84 ரன்களுடன் ஸ்டோக்ஸ் மட்டும் களத்தில் இறுதிவரை நின்று போராடி கொண்டிருந்தார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து அணி 14 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து பரபரப்பான ஃபைனல் மேட்ச் டிராவில் முடிவடைந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும், சூடு குறையாமலிருக்க ஸ்டோக்ஸ் - பட்லர் ஜோடியே களமிறங்கியது. போல்டு வீசிய சூப்பர் ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட இங்கிலாந்து 15 ரன்களை எடுத்தது. 16 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்தின் குப்டில் - நீசம் ஜோடி, ஆர்ச்சர் வீசிய ஓவரில் 15 ரன்களை எடுக்க, சூப்பர் ஓவரும் டிராவில் முடிவடைந்தது.

இதையடுத்து, இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை விட அதிக பவுண்டரிகள் (ஆறு பவுண்டரிகள் அதிகம்) அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகக்கோப்பை தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அளிக்கப்பட்டது.

0 Comments

Write A Comment