வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 19வது போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றது. சவுத்தாம்டனில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் லீவிஸ், ஆண்ரே ரசல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர். இங்கிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மார்க் வுட் வேகத்தில் தடுமாறியது. கிறிஸ் கெயில் (36), பூரன் (63), ரசல் (21) ஆகியோர் தவிர, மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவு ரன்கள் எடுக்கவில்லை. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் எடுத்திருந்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் காயமடைந்ததால், பேர்ஸ்டோவுடன், ஜோ ரூட் துவக்க வீரராக களமிறங்கினார். பேர்ஸ்டோவ் (45) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த வோக்ஸ் (40) அதிரடி காட்டி அவுட்டானார். மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எளிதாக சமாளித்த ரூட், ஒருநாள் அரங்கில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இவருக்கு பென் ஸ்டோக்ஸ் நல்ல கம்பெனி கொடுக்க, இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆல் ரவுண்டரான ஜோ ரூட் வென்றார்.
இப்போட்டியில் 36 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற வரலாறு படைத்தார். இவர் 36 போட்டியில் 1632 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
0 Comments