உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு சென்றது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 224 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ராய், பேர்ஸ்டோவ் களமிறங்கினார்கள்.
இவர்கள் ஆஸி., பவுலர்களின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினர். குறிப்பாக அரைசதம் அடித்த ராய் பந்துகளை நாலாபக்கமும் தெறிக்க விட்டார். பேர்ஸ்டோவ் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரூட் களமிறங்கினார்.
ஸ்மித்தின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸரை பறக்கவிட்ட ராய், 85 ரன்கள் எடுத்திருந்த போது, கம்மின்ஸ் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், ரிப்ளேயில் பேட்டில் பந்து படவில்லை என்ற தெரிந்ததால் ராய், ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் கேப்டன் மோர்கன் வந்தார்.
மோர்கனும், ரூட்டும் பொறுப்புடன் விளையாட 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டி, இறுதிப்போட்டிக்கு சென்றது. ரூட் 49, மோர்கன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
1992 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது அந்த நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை வெல்லாத இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதுகிறது.
உலகக்கோப்பையில் 7 முறை அரையிறுதியில் வென்ற ஆஸ்திரேலியா முதல்முறையாக தோல்வி அடைந்துள்ளது. 9 உலகக்கோப்பை தொடர்களில் 8 முறை அரையிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே அணி ஆஸ்திரேலியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments