Tamil Sanjikai

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கிய நிதியில் நடந்துள்ள மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது. காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்திற்கு கடந்த 2002–ம் ஆண்டு முதல் 2011 வரை ஒதுக்கிய ரூ.43 கோடி மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

அதுமட்டும் இல்லாமல் அமலாக்கப்பிரிவும் அவர்கள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்பேரில் சண்டிகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா ஆஜரானார். அவரிடம் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

முன்னதாக மாநில அரசு விசாரித்து வந்த இந்த வழக்கை காஷ்மீர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 2015–ம் ஆண்டு சி.பி.ஐ. எடுத்துக்கொண்டது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை பரூக் அப்துல்லாவும், அவரது மகன் உமர் அப்துல்லாவும் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment