Tamil Sanjikai

ஐபிஎல் லீக் டி 20 போட்டியில், வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டம் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரித்வி ஷா- தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.இளம் வீரரான பிரித்வி ஷா அதிரடியாக ஆடியதில் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 24 ரன்களை குவித்து, சஹார் பந்தில் அவுட்டானார்.

அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் களமிறங்கியதும் ஆட்டம் சூடு பிடித்தது. எனினும் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 25 ரன்களை பந்த் எடுத்திருந்தபோது, பிரவோ பந்துவீச்சில் அவுட்டானார். இதன் பின்னர் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தது. அதிகபட்சமாக தவான் மட்டும் 51 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் சென்னை தரப்பில் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் ராயுடு, இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வாட்சன் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிஸ்ரா பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து தோனி, கேதார் ஜாதப் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்து சென்னை அணி 2 வது வெற்றியை ருசித்துள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

0 Comments

Write A Comment