Tamil Sanjikai

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று இருக்கும் கங்குலி, மின்னல் வேகத்தில் செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றத்துக்கான நடவடிக்கை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக கூட்டம் வர நடவடிக்கை எடுப்பேன் என பிசிசிஐ தலைவராக பதவி ஏற்கும் முன்பே கூறி இருந்தார் கங்குலி. இந்த நிலையில், பதவி ஏற்ற மறுநாளே அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்து, "இத்தனை வேகமா?" மிரள வைத்துள்ளார்

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு நேரில், மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

பலரும் இதற்கு பராமரிப்பின்மை, ஊருக்கு வெளியே சுமார் 15 - 20 கிலோமீட்டரில் மைதானம் இருப்பது, பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதி இன்மை என பல்வேறு காரணங்களை கூறி வந்தனர்.

ஆனால், பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கும் முன் பேசிய கங்குலி, அந்த காரணங்களால் மக்கள் வருவது குறையவில்லை. போட்டிகளை பகல் -இரவு போட்டிகளாக நடத்தப்பட்டால் அதிக கூட்டம் வரும் என்று கூறினார்.

கூறியதோடு நிற்காமல் தலைவராக பதவி ஏற்ற மறுநாளே இது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் பேசி பகல் - இரவு டெஸ்ட் ஆட அணி சார்பாக சம்மதம்வாங்கியுள்ளார்.

உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் குதித்த கங்குலி, அடுத்த மாதம் ஆட இருக்கும் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக ஆட சம்மதமா? எனக் கேட்டு வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

கொல்கத்தாவில் நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளார் கங்குலி. அது அவரது சொந்த ஊர் என்பதோடு, மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பின் தலைவராக அவர் சுமார் 5 ஆண்டு காலமாக இருந்தார். மேலும், வங்கதேசம் - மேற்கு வங்காளம் இடையே நெருங்கிய வரலாற்று தொடர்பு இருப்பதும் ஒரு காரணம்.

வங்கதேச கிரிக்கெட் போர்டு இரண்டு நாட்கள் முன்பு தாங்கள் கடிதத்தை பெற்றதாகவும், தாங்கள் இன்னும் இது பற்றி விவாதிக்கவில்லை என்றும் விளக்கம் கூறி இருக்கிறது. ஒரீரு நாட்களில் எங்கள் முடிவை கூறி விடுவோம் என்றும் கூறி உள்ளது.

வீரர்கள் மற்றும் அணி நிர்வாக உறுப்பினர்கள் பகல் - இரவு டெஸ்ட் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்த பின்பே தங்களால் முடிவெடுக்க முடியும் என கூறி உள்ளது வங்கதேச கிரிக்கெட் போர்டு.

பகல் - இரவு டெஸ்ட் என்றால் பிங்க் நிற பந்து தான் பயன்படுத்தப்படும். அதில் ஆட வேண்டும் என்றால் வீரர்கள் அதற்கு தயாராக வேண்டும். எனவே, அதையெல்லாம் ஆலோசித்த பின்பே தங்களால் முடிவை சொல்ல முடியும் என வங்கதேச கிரிக்கெட் போர்டு கூறியுள்ளது.

கங்குலியின் பகல் - இரவு டெஸ்ட் சாத்தியம்ஆனால் அது இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது வங்கதேச டெஸ்ட் தொடரிலேயே சாத்தியம் ஆகுமா? வங்கதேசம் அதற்கு ஒப்புதல் அளிக்குமா?. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 Comments

Write A Comment