இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆன்டிகுவா மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஜடேஜா மற்றும் ரஹானே ஆகியோரின் பங்களிப்பின் காரணமாக இந்திய அணி 296 ரன்களை எட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்து 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
தேநீர் இடைவேளை முடிந்த பின், பிராவோவை எல்பிடபிள்யு முறையில் பும்ரா வெளியேற்றினார். பிராவோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் பும்ரா படைத்தார்.
இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. 11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார் பும்ரா.
11 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் பும்ரா இருக்கிறார். அடுத்த இடங்களில் வெங்கடேஷ் பிரசாத் / ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான் / ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்), காவ்ரி / கபில் தேவ் (16 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
அதேபோல ஒட்டு மொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். 11 டெஸ்ட் போட்டிகளிலேயே விக்கெட்டுகளில் அரைசதம் அடித்து தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் பும்ரா.
0 Comments