Tamil Sanjikai

மிதாலி ராஜை நீக்கியது ஏன் எனக் கேட்டு பயிற்சியாளருக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அண்மையில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடரின்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த போட்டியில், முன்னணி வீராங்கனையான மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. அவரை அணியில் சேர்த்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் வீரர், வீராங்கனைகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் தனித்தனியாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. பிசிசிஐயின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் மேலாளர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோரை நேரில் சந்தித்து இருவரும் தங்களுடைய விளக்கத்தை அளித்துள்ளனர்.

இந்நிலையில் மிதாலி ராஜை நீக்கிய விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, நாளை பிசிசிஐ உயரதிகாரிகள் முன்பு இவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏற்கனவே, பவாரின் பதவிக்காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைவதால், இது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

0 Comments

Write A Comment