Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 31வது லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டான் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் லிட்டான் தாஸ் 16(17) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் மற்றும் ஷகிப் அல்-ஹசன் அணியின் ஸ்கோரை ஒரளவு உயர்த்தினர். இதில் தமிம் இக்பால் 36(53) ரன்களில் போல்ட் ஆக, அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் உடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த ஷகிப் அல்-ஹசன் 51(69) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சவுமியா சர்கார் வெறும் 3(10) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து இணைந்த முஷ்பிகுர் ரஹிம் மற்றும் மக்முதுல்லா ஜோடி ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இதில் மக்முதுல்லா 27(38) ரன்களும், தொடர்ந்து பொறுப்புடன் ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த முஷ்பிகுர் ரஹிம் 83(87) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மொசாடெக் ஹூசைன் 35(24) ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் முகமது சைபுதீன் 2 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக, முஜீப் உர்-ரகுமான் 3 விக்கெட்டுகளும், குல்படின் நைப் 2 விக்கெட்டுகளும், முகமது நபி மற்றும் தவ்லத் ஜட்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில், கேப்டன் குல்படின் நைப் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். நல்ல துவக்கம் தந்த இந்த ஜோடியில் ரஹ்மத் ஷா 24(35) ரன்களும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாகிடி 11(31) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குல்படின் நைப் 47(75) ரன்களும், முகமது நபி (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்கார் ஆப்கான் 20(38) ரன்களும், இங்ரம் அலி கில் 11(12) ரன்களும் நஜிபுல்லா ஜட்ரன் 23(22) ரன்களும், ரஷித் கான் 2(3) ரன்னும், தவ்லத் ஜட்ரன் (0), முஜிப்-உர்-ரகுமான் (0) ஆகியோர் ரன் ஏதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தனி நபராக போராடிய ஷமியுல்லா ஷின்வாரி 49(51) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷகிப் அல்-ஹசன் 5 விக்கெட்டுகளையும், முஸ்தபிசூர் ரகுமான் 2 விக்கெட்டுகளும், முகமது சைபுதீன் மற்றும் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment